விக்னேஸ்வரன் பாராளுமன்றில் விரும்பியதைச் சொல்ல உரிமை உண்டு
Share
பாராளுமன்றத்துக்குள் எந்த வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றின் முதல் அமர்வில் ஆற்றிய உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் பாராளுமன்றில் நேற்றும் காரசார விவாதம் இடம் பெற்றது.
எனினும், விக்னேஸ்வரனின் உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாது என சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் முதல் அமர்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்றும், இலங்கையின் முதல் பழங்குடி மக்களின் முதல் மொழி என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.