ரயில், பஸ் சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்க அனுமதி
Share
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்று முதல் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இந்த சேவையை வழங்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்துச் சேவை இடம் பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரை யாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய தொடருந்து சேவைகளை ஒதுக்குவதற்கு இன்று புதன்கிழமை தொடக்கம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை குறித்த முடிவை செயல்படுத்த இலங்கை ரயில்வே திணைக் களத்திடம் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதா என்று அமைச்சர், ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டார்.
அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டதால் டிக்கெட் வழங் கலை இன்று ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் அனுமதியளித்தார்.
ஊரடங்கு உத்தரவு நடை முறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும், நாட்டின் அனைத்து இடங்களுக்கும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படுகிறது.
ரயில்வே பருவகாலச் சிட்டைகள் மற்றும் சீசன் டிக்கெட் அல்லாத டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும்.
கோவிட் – 19 தொற்று நோயைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தல்களின்படி அத்தியாவசியப் பணிகளைத் தவிர, பொதுப் போக்குவரத்து சேவை களைப் பயன்படுத்தக்கூடாது என பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.