யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்
Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணித புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்
.
நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்யும் வரை பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெற்றிடத்திற்காக ஆறு பேர் விண்ணப்பித்த நிலையில் மத்திய மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூன்று பேர் ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதனடிப்படையில் மூவரினது பெயர்களையும் கடந்த 13ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இதனையடுத்துப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களிலிருந்து மதிப்பீட்டிற்கமைய முதல் நிலையைப் பெற்றிருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குண ராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமித்துள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று காலை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.