அரசியல் தீர்வு கிடைக்குமென தமிழரை ஏமாற்றியது போதும்
Share
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும், அரசியல் அமைப்பு மூலமாக நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்ற கதைகளைக் கூறிக்கூறி தமிழர்களை எழுபது ஆண்டுகளாக ஏமாற்றி விட்டனர்.
இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் அழிவுகளை சந்திக்க ஒரு சூழல் உரு வாக்கியதற்கு ஆட்சியாளர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் அனைத்தின் பின்னணியிலும் ஆட்சி யாளர்களின் பங்களிப்பே இருந்தது எனவும் அவர் குற்றம் சுமத்துகின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் நகர்வுகள், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமது அரசியல் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த குரல் எழும்பும் வேளைகளில் எல்லாமே ஆளும் தரப்பு அதற்கு இனவாத காரணிகளைக் கூறி மூடி மறைக்கவே சகல காலங்களிலும் முயற்சித்துள்ளனர்.
அதனை இந்த எழுபது ஆண்டுகளில் தோற்கடிக்க முடியாது போனமை குறித்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என அனைவரும் அளவுக்கு அதிகமாக நிம்மதியை, உடைமைகளை, உயிர்களை இழந்து விட்டனர்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் வரையில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் இழந்தவையே அதிகமாகும்.
அவ்வாறு இருந்தும் யுத்தம் முடிவுக்கு வந்து குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாவது இந்த நாடு அமைதியாக சென்றுள்ளதா, ஆட்சியாளர்கள் அமைதியாக இந்த நாட்டினை கொண்டு சென்றார்களா என்ற கேள்வி உள்ளது.
இந்த நாட்டில் அரசியல் தீர்வு கிடைக்கும், அரசியல் தீர்வு வழங்கப்படும், அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வுகள் சாத்தியம் என மிக நீண்ட காலமாக கதைகளைக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டனர்.
இனியும் அதே ஏமாற்றுக் கதையை எத்தனை ஆண்டுகளுக்கு தமிழர்கள் நம்பத் தயாராக உள்ளனர் என்பது மட் டுமே எமது கேள்வியாக தமிழர்கள் மத்தியில் முன்வைக்கின்றோம்.
தமிழர்களை அவர்களின் கலாசார, சமய, மத, நம்பிக்கைகளுக்கு அமையவும் அரசியல் அபிலாசைகளுக்கு அமையவும் சுயமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
அது வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் தேசிய கொள்கைக்குள் அவர்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழலை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.
ஆட்சியாளர்களுக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கும் நாம் கூறிக்கொள்வது ஒன்றுதான்.
தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீக மக்கள். சிங்களவர்களுக்கும் ஏனைய மதத்தவருக்கும் இருக்கும் அதே உரிமை தமிழர்களுக்கு இந்த மண்ணில் உள்ளது என்பது நினைவில் வைத்து ஆட்சி செய்ய வேண்டும்.
அதேபோல் தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழும் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.