பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்
Share

பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக் கிழமை குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற பருத்தித்துறை பொலிஸார் அங்குள்ள ஹன்டர் கனரக வாகனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் அன்றைய தினம் மணல் அகழ்வில் ஈடுபட்டதாகத் தெரிவித்து வீட்டிலிருந்த ஹன்டர் ரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸார் எடுத்துச் செல்ல முற்பட்ட சமயம் அங்கிருந்த பொதுமக்களுக்கும் பருத்தித்துறை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனை அங்கு நின்ற ஒருவர் கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸார் கைத் தொலைபேசியினை பறித்துள்ளனர்.
பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து கைத்தொலைபேசியை உரியவரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் பருத்தித்துறை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி யளவில் மீண்டும் அங்கு சென்று ஒளிப்பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை தருமாறு கூறி அப்பகுதியில் நின்றவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதில் பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மூர்ச்சையற்று காணப்பட்டனர்.
இதனை அடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு அவசர அழைப்பு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் பொலிஸார் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டமை அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படுகாயமுற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு, வைத்தியசாலை அனுமதிப் பத்திரத்துடன் உணவு எடுத்துச் சென்ற இரு பெண்களை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
24 மற் றும் 26 வயதுடைய பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடத்தனையில் இருந்து மந்திகையில் உள்ள பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்குச் செல்லும் வழியில் மாவடிச் சந்தில் வைத்து கைது செய்துள்ளனர்.