அமெரிக்காவின் 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்பு
Share
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீரேஞ்சர்’ (Sea Ranger) பன்னோக்கு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, நேற்று (23) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவர் புதிய ஹெலிகொப்டர்களைப் பார்வையிட்டு, அதன் பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதன்போது, இலங்கை விமானப்படைக்கும் அமெரிக்க பசிபிக் விமானப்படைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையொன்றும் கையெழுத்திடப்பட்டது.
இதில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் திலான் குணதிலக்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (Kevin Schneider) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


