Type to search

Editorial

பரீட்சைப் பெறுபேறுகள் நாம் கற்றறிய வேண்டியவை

Share

2025 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன.

பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த பகுப்பாய்வுகள் பல வழிகளாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பரீட்சைப் பெறுபேற்றின் பகுப்பாய்வுகளின் படி, வடக்கு மாகாணம் கடைசிக்கு முதல் இடத்தில் இருப்பதை அறியமுடிகிறது.

ஒரு காலத்தில் கல்வி என்றால் அது யாழ்ப்பாணம் என்ற நிலைமை இருந்தது.

ஆனால் இப்போது எங்கள் கல்வி நிலை நாட்டின் அடிமட்டத்தில், கடைசி நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. இங்குதான் எங்கள் கல்வி கடும் வீழ்ச்சி கண்டுள்ளதென்பது தெரியவருகிறது.

ஆம், பாடசாலைக் கல்வி இதற்கு மேலாக தனியார் கல்வி நிறுவனங்கள் என்பன இயங்கு நிலையில் இருந்தாலும் வடக்கின் கல்வி அடைவு மட்டம் மிகவும் வீழ்ச்சிக் கட்டத்தில் இருப்பது உண்மையில் வேதனைக்குரியது.

தவிர, 2025 ஆம் ஆண்டின் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் நாம் கடைசி நிலையில் இருக்கின்றோம் என்ற மனநிலை இன்னமும் ஒரு சில வாரங்களில் மறைந்து – மறந்து போய்விடும்.

பின்னர் ஆசியர், அதிபர் இடமாற்றம் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சண்டித்தன அறிக்கைகள் என்ற கலாசாரத்திற்குள் எங்கள் பாடசாலைக் கல்வி வீழ்ந்து விடும்.

பிறகென்ன ஆசியர்களின் மத்தியில், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிக்கைகளும் அவர்களின் ஊடகச் செய்திகளுமே பேசு பொருளாகும்.

இடைவேளைகளில் அதிகாரிகளுக்கு எதிரான பாடங்களும் பாடசாலைகளில் நடந்தாகும். இஃது பாடசாலைகளில் நடக்க, கல்வி வலயங்களில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தமக்குள் முறைசாரா மாநாடு நடத்துவர்.

அதில் தமக்கு வேண்டிய அதிபர், ஆசியர்களைப் போற்றுவர். மற்றவர்களைத் தூற்றுவர். இதனிடையே இரண்டுக்குள்ளும் அகப்படாத அதிபர், ஆசிரியர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்வர்.

நிலைமை இதுவென்றால், நம் மாண வர்கள் தம்பாடு. அதிபர், ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கின்ற மனநிலையில் இருந்து அவர்கள் விடுபட்டுள்ளனர்.

கையடக்கத்தொலைபேசிகளும் தொலைக் காட்சித் தொடர்களும் முகநூல் பதிவுகளும் தகவல் பரிமாற்றங்களும் அவர்களை மீளா அடிமைகளாக்கியுள்ளன.

பாடசாலைகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு பொழுது போக்கும் இடமாக ஆகிவிட்டது.

நிலைமை இதுவாக இருக்கையில், தமது பிள்ளைகளுக்கு ஆசியர்கள் அடித்தால் – பிள்ளைகளை அதட்டினால் பொலிஸில் முறைப்பாடு செய்து சாதனை படைக்க காத்திருக்கும் பெற்றாரும் பாடசாலை நிர்வாகத்தில் மூக்கை நுழைத்து எல்லாவற்றையும் குழப்பி அடிக்கும் பழைய மாணவப் பெருந்தகைகளும் சேர்ந்து எங்கள் கல்வியை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர்.

இங்கு நாம் கூறும் குற்றச்சாட்டுக்கள் பொதுவானவையன்று. அஃது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்.

ஏனெனில் எங்கள் கல்விக்காக தங்களை அர்ப்பணிக்கும் அதிபர்கள் – ஆசிரியர்கள் – மாணவர்கள – பெற்றோர்கள் – பழைய மாணவர்கள் – கல்வி அதிகாரிகள் – நலன்விரும்பிகள் என்ற மேன்மக்களின் அர்ப்பணிப்பான பாடுகள்தான் எமக்குக் கிடைத்த நல்ல பெறு பேறுகளாகும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link