Type to search

Editorial

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Share

தேவையில்லாத வேலையை ஒருவர் செய்வாராயின் தேவையுள்ள வேலையை செய்ய முடியாமல் போகும்.

ஆம், நம் தமிழ் அரசியலில் நடந்த பல விடயங்கள் தேவையில்லாதவை. அதன் காரணமாக இன்று நம் தமிழர் அரசியல் பலயீனப்பட்டு, சுயமரியாதையை இழந்து நிற்கிறது.

என்னதான் அரசியலாக இருந்தாலும் பழிச்சொற்களும் கடும் வார்த்தைகளும் எவரையும் சுடும். அவரவர் மனதை வேதனைப்படுத்தும். சபையில் அவகௌரவத்திற்கு ஆளாக வேண்டியதாயிற்றே என்ற துன்பம் சாதாரணமானதன்று.

எனினும் இன்றைய நம் அரசியல் இத்தகைய அனுபவிப்புகளுக்குள் வீழ்ந்து கிடந்து எழ முடியாமல் தத்தளிக்கிறது.

இங்குதான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என புறநானூறு கூறுகின்ற மெய்ப்பொருளை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

உண்மை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற புறநானூற்று அடிகளின் உள்ளார்ந் தத்தை நாம் ஆத்மார்த்தமாக உணர்ந்து கொள்வோமாக இருந்தால், எமக்காகின்ற தீதுக்கும் நன்றுக்கும் நாமே காரணம்.

ஆம், இன்றைய தமிழ் அரசியல் இத்துணை தூரம் அவலப்படுவதற்கும் அசிங்கப்படுவதற்கும் வேறு யாரும் காரணமல்ல. அனைத்தும் நாம் செய்தவற்றின் பலாபலனேயாம்.

உண்மை. எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மீது நாம் பழி சுமத்தினோம் – மற்றவர்களை இழிவுபடுத்தினோம் – துரோகிகள் என்று நாக்கூசாமல் கூறினோம்.

தமிழினம் – தமிழர்களின் உரிமை என்றால், அது பற்றி பேசுவதற்கு நாங்களே தத்துவகாரர் என்று நினைத்தோம். யதார்த்தவாதிகளை கடுமையாக விமர்சித்தோம்.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எத்துணை தூரம் மனம் நொந்திருப்பார்கள் – அவர்களின் உறவுகள் எந்தளவு தூரம் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று நாம் மனிதப் பண்போடு ஒரு போதும் சிந்திக்கவோ – அதுபற்றி நினைத்துப் பார்க்கவோ இல்லை.அதன் காரணமாக உண்மையான தமிழ் இனப்பற்றாளர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் ஒதுங்கியதை – அவர்களின் மௌனத்தை எங்களின் சுய அரசியல் வெற்றியாக நாம் நினைத்தோம். மகிழ்ந்தோம்.

ஆனால் நல்லவர்கள் வெளியேறினால் – நல்லவர்களை வெளியேற்றினால், நமக்குக் கிடைப்பவர்கள் எப்படியாக இருப்பார்கள் என்று நாம் ஒருபோதும் நினைத்ததில்லை.

ஆனால் இன்று அதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டு நிற்கிறது.

என்ன செய்ய முடியும் நாமே நமக்குப் பகையானோம். நாமே நமக்குத் தீவினையைத் தேடிக் கொண்டோம். இனி அதை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும். அந்த அனுபவிப்புக்கான காலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link