தமிழர் தாயகம் எங்கும் விவசாயப் புரட்சி ஏற்பட வேண்டும்
Share
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் தொழில் முயற்சிகள், பண்பாட்டு அம்சங்கள், கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலைமைகள் என்பவற்றை எடுத்து நோக்கும்போது, தொழில்சார் முயற்சிகளில் நம் தமிழ் இனம் பின்னடைவில் இருக்கிறது என்பதை இங்கு கூறித் தானாக வேண்டும்.
அதாவது சிங்கள முஸ்லிம் மக்கள் ஏதோவொரு தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
அதாவது வேலையில்லை என்ற பிரச்சினை சிங்கள, முஸ்லிம் மக்களிடம் இல்லை என்று கூறுமளவுக்கு அவர்கள் ஏதாவதொரு தொழில் முயற்சியைத் தெரிந்தெடுத்து அதனைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
அவர்களிடம் தொழிற்பேதமைகள் எதுவும் கிடையாது. அதுபற்றிய விமர்சனங்களும் அந்த மக்கள் மத்தியில் இல்லை.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தாம் செய்கின்ற வேலை கெளரவம் மிக்கதாக இருக்க வேண்டும்.
இல்லையேல் மற்றவர்கள் தம்மை விமர்சிப்பார்கள் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதனால் தமிழர் தரப்பில் வேலை எதுவும் இல்லை என்று இருக்கக்கூடியவர்கள் அதிகம் என்றே கூற வேண்டும்.
இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் ஆற்றுகின்ற தொழில் முயற்சிகளைப் பார்க்கும்போது அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆம், வட பகுதியில் கிடைக்கக்கூடிய பழைய இரும்புகள், தகரங்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பவற்றை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை கொழும்புக்கு அனுப்பி வைத்த வண்ணமுள்ளனர்.
முஸ்லிம்களின் இந்த வியாபாரத்தால் அவர்கள் வாழுகின்ற யாழ்ப்பாணம் அராலி வீதி, பொம்மைவெளிப் பகுதிகள் வியாபாரத்தளமாக, பழைய இரும்புப் பொருட்களின் விற்பனை நிலையமாக மாறியிருப்பதை அவதானிக்க முடியும்.
இதனால் முஸ்லிம் மக்களில் எவரும் வேலையில்லாமல் இல்லை என்ற அளவில் கடும் முயற்சி உடையவர்களாக இருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறிய சிறிது காலத்துக்குள் மிகப்பெரிய தொழில் முயற்சிகளை அவர்கள் இங்கு கணிசமாக நிறுவியுள்ளனர்.
இதேபோல வடபுலத்துக்கு வந்து வியாபாரம் செய்கின்ற சிங்கள மக்களைப் பார்க்கின்றோம்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப் பகுதியில் மரக்கறி வியாபாரத்தை முழுநேரமாகச் செய்கின்ற சிங்கள சகோதரர். யாழ்ப்பாணம் இராசபாதையில் நிறுவனம் அமைத்து அங்கு சுத்திகரிப்பு குடிநீரைத் தயாரித்து அதனை வீடு வீடாகக் கொண்டு சென்று விநியோகிக்கின்ற சிங்கள இனத்தவர்.
தளபாடங்களைத் தோளில் சுமந்து விற்பனை செய்கின்ற தென்பகுதி மக்கள் என்று பார்க்கும்போது எங்களிடம் தொழில் முயற்சிகள் மந்தமாக இருக்கின்றன என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இப்பெரும் குறையை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டுமாயின், விவசாயப்புரட்சியை அதிரடியாக ஏற்படுத்துவதே ஒரே வழியாகும்.
இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உணர்வு பூர்வமாகச் சிந்தித்தால், தமிழர் தாயகத்தில் விவசாயப் புரட்சி பெரும் சாதனை படைக்கும்.