உன்னுடைய பிரச்சினையை வைத்து என்னுடைய தேவையை நிறைவேற்றுதல்
Share
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேசம் தீர்வு தரும் என்ற எமது நம்பிக்கை மெல்ல மெல்ல பொய்த்துப் போவதைக் காண முடிகின்றது.
ஆம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் போதெல்லாம் இந்தத்தடவையாவது எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருப்போம்.
எங்கள் நம்பிக்கையை உசார்படுத்துவது போல கூட்டத்தொடரின் முற்பகுதியில் சர்வதேச நாடுகள் இலங்கை ஆட்சியாளர்களை கடுமையாக அதட்டுவர். விமர்சிப்பர்.
பின்னர் வாக்கெடுப்பு என்று வந்து விட்டால், இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசமும் வழமையாக வழங்கப்படும் உதவிகளை இரட்டிப்பாகவும் வழங்குவதென சர்வதேச நாடுகள் அறிவிக்கும்.
இதுவே வழமை என்ற பின்பு; முதலும் கடைசியுமாக 2021ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமென தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதான கருத்துக்கள் இப்போது வெளிவரத்தொடங்கிவிட்டன.
ஆக, வெறும் நிபந்தனைகளும் எச்சரிக்கைகளும் கால அவகாசங்களும் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.
தவிர, ஐ.நா மனித உரிமை பேரவை எடுக்கின்ற தீர்மானங்களை இலங்கையின் ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை என்பதும் தெரிந்த விடயம்.
அப்படியானால், இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மை என்றும் அங்கு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று கூறுவதும் ஏன் என்றால், இங்குதான் உலக நாடுகளின் உள்நோக்கம் தெரியத்தொடங்குகிறது.
ஆம், இவ்வாறு கூறுவதன் மூலமாக, இலங்கை அரசாங்கத்தை மசிய வைத்து இலங்கை அரசாங்கத்தால் தமக்கு ஆக வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திரோபாயத்தை பெரும்பாலான உலக நாடுகள் செய்தாகின்றன.
அதாவது ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதனூடாக இலங்கை அரசாங்கம் இறங்கிவரும்.
அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உன் நாட்டில் எனக்கு அது வேண்டும். இது வேண்டும் என்று கேட்டால், இலங்கை அரசு மறுக்கவா போகிறது.
ஆக, உன்னுடைய பிரச்சினையை வைத்து என்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்கின்ற தந்திரோபாயத்தை உலக நாடுகள் பின்பற்றுகின்றன எனில், நாம் என்னதான் செய்ய முடியும்.
அட, உள்ளூரில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் தரப்புகளாவது பலமானதாக – நேர்மையானதாக – தமிழ் மக்களுக்கு விசுவாசமானதாக இருந்தால் பரவாயில்லை. எங்களின் தொடர் அகிம்சைப் போராட்டம் ஏதாவதொரு வழியில் எங்களின் உரிமையை – எங்களுக்கான நீதியை உரத்து ஒலித்துக் கொண்டே இருக்குமென நினைக்கலாம்.
ஆனால் நம் தமிழ் அரசியல்வாதிகளில் யாரை நம்புவது என்பதிலேயே பலத்த சந்தேகங்களும் ஐயங்களும் இருக்கும்போது, இறைவன் உதவினாலன்றி தமிழ் இனத்துக்கு வேறு கதி ஏதுமில்லை.