Type to search

Editorial

இந்தியாவின் உன்னிப்பான அவதானிப்பு யாருக்கானது?

Share

பொதுவில் வார்த்தைகள் பெறுமதியானவை. அதிலும் கூறுவோரைப்பொறுத்தும் வார்த்தைகளின் பெறுமானம் உயர்ந்து நிற்கிறது.
இஃது எல்லா விடயங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான்.

மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், சிறையில் இருந்த ஜவர்ஹலால் நேரு அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் என்பன ஏகப்பட்ட பெறுமதியுடையவை.

குறித்த கடிதத்தின் உள்ளீடு மட்டும் அந்தக் கடிதத்தின் பெறுமதியை உயர்த்தவில்லை. மாறாக கடிதத்தை எழுதியவரின் பெறுமதியும் அந்தக் கடிதத்தின் பெறுமதியைக் கூட்டியுள்ளது.
இவ்வாறு பல உதாரணங்களைக் குறிப்பிட்டுக்கூறமுடியும். பிரிட்டிஷ் நாட்டின் முடிக்குரிய எலிசபெத் மகாராணியார் அணிந்த அணிகலன்கள் கோடிக்கணக்கான பெறுமதிக்கு விற்பனையாகி இருந்தது.
இதுபோல வார்த்தைகளும் மிக உயர்ந்த பெறுமதி கொண்டவை.

1983ஆம் ஆண்டு இலங்கையில் ஜூலைக் கலவரம் நடந்தபோது, இலங்கை விவகாரத்தை மிக உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கூறிய வார்த்தை இலங்கையை அதிர வைத்தது. அந்தளவுக்கு சொல்பவரின் பெறுமதி இருந்தது.

ஆனால் இப்போது உலகத்தலைவர்கள் எவரது வார்த்தைகளுக்கும் பெறுமதி இல்லாமல் போயிற்று. அந்தளவுக்கு வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருப்பதுதான் காரணம் எனலாம்.
இதுபோல வெளிநாட்டுத் தலைவர்களதும் அவர்களின் பிரதிநிதிகளினதும் விஜயங்களும் பெறுமதி வாய்ந்தவையாக இருப்பது உண்டு.
உதாரணத்துக்கு 1983 ஜுலைக் கலவரத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை ஆலோசகராக இருந்த பார்த்தசாரதி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவரின் வருகை பாரதப் போருக்கு முன்பான கிருஷ்ண தூதுக்கு இணையாகப் பார்க்கப்பட்டது.

அந்தளவுக்கு பார்த்தசாரதியின் தூது பெறுமதியாக இருந்தது.
இதைக் கூறும்போது அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்து போனார்.
அவர் வந்துபோன கையோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது.
தவிர, அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வந்து போனார்.
அவரின் வருகை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி மரணமாகின்ற இஸ்லாமிய மார்க்கம் சார்ந்தவர்களின் உடல்களையும் தகனம் செய்வது என்ற அரசாங்கத்தின் முடிவு மாற்றப்பட்டு மரணித்த இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டது.
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நடத்தப்படும் விவாதங்களை இந்தியா உன்னிப்பாகக்கவனித்து வருகிறது என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.
ஆம், கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசாங்கத்தின் வார்த்தை; உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது என்பதாகவே இருக்கிறது.

இந்தியாவின் இந்த அவதானிப்பபு இந்தியாவின் பாதுகாப்புக்கானதா அல்லது இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கானதா? என்பதுதான் இங்கு புரியாத புதிர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link