மூன்றிலும் எண்பத்தேழிலும் சம்பந்தர்(கள்) பெற்ற ஞானம்
Share
ஞானம் என்பது திருவருளாலும் காலத்தின் நீட்சியாலும் கிடைக்கப் பெறுவது. கருவில் திருவுடையவரை ஞானம் தேடி வரும்.
அஞ்ஞான இருளில் மூழ்கியிருப்போர்க்கு காலத்தின் அசைவு ஞானத்தைப் போதிக்கும்.
இங்கு முன்னையது தெய்வீகமானது. பின்னையது அனுபவித்து அடைவது.
இதை நாம் கூறும்போது, இதற்கு உதாரணம் கூறுங்கள் என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம். அவ்வாறு கேட்டால் பின்வருவனவே உதாரணமாகும்.
சீர்காழியில் தன் தந்தையோடு ஆலயத்துக்குச் செல்கிறார் மூன்று வயதேயான சம்பந்தக் குழந்தை.
தன் பிள்ளையை கேணிப்படியில் இருத்தி விட்டு, சிவபாதவிருதையர் நீராடுகிறார்.
தந்தையைக் காணாத குழந்தை அம்மையே! அப்பா! என்று அழுகிறது. கேணியில் நீராடிக் கொண்டிருந்த தந்தைக்கு தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லை.
ஆனால் பார்வதி பரமேஸ்வரனுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்ட மாத்திரத்தில்,
அம்மையும் அப்பனும் எருதேறி சீர்காழிக்கு வருகின்றனர்.
அன்னை பார்வதி பொற்கிண்ணத்தில் பால் எடுத்து குழந்தைக்குப் பருக்கி விடுகிறார்.
இப்போது சம்பந்தக் குழந்தை ஞானசம்பந்தக் குழந்தையாகிறது.
தன்னிடத்தே வந்ததும் பால் தந்ததும் தோடுடைய செவியனாகிய அம்மை அப்பன் என்பதை உணர்ந்து உலகுக்கு உணர்த்துகிறார் சம்பந்தர்.
இஃது மூன்று வயதில் கிடைத்த ஞானம். கருவில் திருவுடையார்க்கு கிடைக்கவல்ல ஞானம் என்று இதனைக் கூறியிருந்தோம்.
இப்போது மூன்று வயதில் ஞானம் பெற்ற சம்பந்தரை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இனி 87 வயதில் ஞானம் பெற்ற சம்பந்தரை அறியலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எத்துணை தடிப்போடு கட் சியை நடத்தினார். அடுத்தவரின் கருத்துக்கு இம்மியும் மதிப்புக் கொடுக்காதவர்.
எதிர்க்கட்சித் தலைமையும் ரணில் பிரதமர் என்ற தடிப்பும் அவரின் செருக்குக்கு வைரம் பாய்ச்சின.
காலம் அசைந்தது. ரணில் பதவி இழந் தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தரை நழுவிச் சென்றது.
பொதுத் தேர்தல் வந்தது. வீட்டுக்குள் குழப்பம். தேர்தல் முடிவுகள் வீழ்ச்சி கண்டன. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை தோற்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்தி ரனுக்கு கட்சிக்குள் எதிர்ப்புக் கிளம்பியது. பண்டிதர் கா.பொ.இரத்தினம் எழுதிய சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் கூட்டமைப்புக் குள்ளேயே உள்ளன.
கூட்டமைப்பின் தோல்விக்குச் சம்பந்தரே காரணம் என்ற குற்றம் அவரின் முகம் நோக் கிச் சுட்டப்படுகிறது.
அவரை விலத்து; இவரை நீக்கு என்பதே கட்சிக் கூட்டத்தின் கருப்பொருளாயிற்று.
இனி தன்னால் உறுக்க இயலாது. கட்சி யைக் காப்பாற்றவும் முடியாது.
தன் இறுதிக்காலத்தில் எல்லாம் கைநழுவிப் போகிறது.
இப்போது இரா.சம்பந்தர் தான் செய்ததை அனுபவிக்கின்றார். 87 வயதில் ஞானம் கிடைக்கப் பெறுகிறது.