முருகா! நான் வர முடியாது நீ தேரில் ஏறி என்னிடம் வா!
Share
இன்று தேர் ஏறி வருகின்ற நல்லூர் முருகனுக்கு நாம் விடுக்கும் அவசர விண்ணப்பம் இது.
நல்லூர் முருகா சண்முகப்பெருமானாக நீ தேரேறி வருகின்ற காட்சியைக் காண்பார் பேறு பெரும் பேறாம்.
அதிகாலைப் பொழுதில் ஆறுமுகம் கொண்டு சண்முகப் பெருமான் தேரேறும் மிடுக்கில் உள் வீதியில் ஆடி வருகின்ற காட்சியால் உலகம் யாவையும் உன்னுள் அடக்கம் என்ற தத்து வம் உணரப்படும்.
கூடவே தேரேறி திருவீதி வருகின்றவேளையில், அங்கப்பிரதட்சணமும் அரோகரா ஒலியும் உன் தரிசிப்பின் மகிமையை உணர்த்தும்.
என்ன செய்வது கொரோனா என்ற கொடிய நோயால் உன்னிடம் வருவதற்கும் கட்டுப்பாடு. சூரசங்கார காலத்திலும் இல்லாத பாதுகாப்பு இப்போது உனக்கு.
உன்னை நாடி வருகின்றவர்களில் சூரர் தரப்பும் இருக்கலாமோ என்பதுபோல ஆள் அடையாள அட்டைகளைப் பதிவுசெய்கின்ற நடைமுறைகளும் மும்முரமாய் உள்ளன.
இஃதென்ன; பாதுகாப்பு முருகா! ஆனாலும் சோதனை நடத்துவது சூரர் தரப்பு எனும் போது தான் எதுவும் புரியவில்லை.
ஓ! முருகா உன்னுடன் சூரபத்மன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டானோ தெரியவில்லை.
முகநூல்களிலும் அவை இன்னமும் பதிவாகவில்லை.
ஆனாலும் உனக்கும் சூரனுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகிற்று என்றே என்னால் ஊகிக்க முடிகிறது.
இந்த ஊகம் ஊடகத்தொழிலின் தோச மாகவும் இருக்கலாம். பரவாயில்லை ஆள் அடையாள அட்டை காட்டி, கமரா முன் தோன்றி, முகம் மறைத்து உன்னிடம் வருவதில் எனக்கு உடன்பாடில்லை.
ஆனாலும் உன் கருமத்தை மட்டும் நீ மிகச் சிறப்பாகச் செய்து முடித்து விடுகிறாய்.
என்ன செய்வது. உள் வீதியில் உன் உருத்திர தாண்டவம் கண்டால், அதுபோதும் மும்மலம் நீங்கி முழுமையாய் உன்னுள் கலப்பதற்கு என்றிருக்கும் என்னால், வரமுடியவில்லை உன்னிடம். ஆதலால் தேரேறி வரும் நீ ஒருக் கால் என்னிடம் வா.
இதுகாறும் நான் வந்து உன் நால் வீதி சுற்றியதில் உனக்கு உடன்பாடுண்டாயின் என் னிடம் நீ வருவதில் தாமதம் ஏதுமில்லை.