மனிதனைக் கண்டால் எட்ட நில் என்று சொல்வதை விட வேறு வழி ஏது?
Share
வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் உங்களோடு பேச முடியவில்லை என்ற கவலை கடந்து, உலகை உலுப்பி நிற்கும் கொரோனாவின் கொடுமையிலிருந்து அனைத்து மக்களும் காப்பாற்றப்படவேண்டும் என இறைவனின் திருவடி தொழுது இம் மடலை எழுதுகிறோம்.
ஊழிக்காலம் போல உலகம் முழுவதிலும் அவலம் நிரம்பிப் போய் இருக்கிறது.
விஞ்ஞானத்தின் உச்சம் விண்வெளியில் வீடு கட்டி புதுமனைப் புகுவிழா நடத்தும் என் றிருக்க,
அயல் வீட்டின் சுகம் விசாரிக்கக் கூட முடியாத அளவில் இயற்கையின் தீர்ப்பு அமைந்து விட்டது.
ஆம், கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் முடக்கி விட்டது. போதாக் குறைக்கு உலக நாடுகளில் நடந்தேறுகின்ற மரணங்கள் மானிடத்திற்கு வந்த பேரழிவை சொல்லி நிற்கின்றன.
மூன்றாம் உலகப் போர் மூண்டால் அன்றி வேறு வழியில் மனித அழிவுக்கு இடமில்லை என்ற கர்வத்தை ஒரு கணப்பொழுதில் அடித்து நொருக்கி விட்ட இயற்கையின் கட்டளையை என்னவென்று சொல்வது.
அன்புக்குரிய பெருமக்களே! மரணம் என்பது காய்த்த மரத்தில் இருந்து கனி விழுவது போல அமைய வேண்டும்.அதுவே மனித வாழ்வின் பூரணத்துவம்.ஆனால் இங்கு நாளொரு வண்ணம் ஆயிரக்கணக்கில் மனித உடலங்கள் பேழைகளில் அடுக்கப்படுகின்றன.
பெற்றபிள்ளை கூட முகம் பார்த்து அஞ்சலிக்க முடியாத அளவில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு கொரோனா வைரஸ் மானி டத்தின் பெறுமதியை தூசிக்குச்சமனாக்கி விட்டது.
அந்தோ! விஞ்ஞானத்தின் விந்தையை விளைவித்த நாடுகள் கூட தத்தளிக்கும் அளவில் கொரோனா வைரஸ் உருத்திர தாண்டவம் ஆடுகிறது எனும் போது, பாவத்தின் சன் மானம் மரணம் என்ற புனித விவிலியத்தின் வார்த்தைகளே நினைவிற்கு வருகின்றன.
ஆம், அறத்தை இழந்து தர்மத்தைப் புதைத்து வல்லவன் மட்டுமே வாழட்டும் என்று வல்லரசுகளும் ஆட்சி அதிகாரத்தை தம்வசம் கொண்டவர்களும் புது விதி வகுத்த போது, நான் படைத்த உலகை நீயா நடத்துவது என்று இறைவன் கேள்வி கேட்பது போல சம காலத்துச் சம்பவம் அமைந்திருக்கிறது.
இன்னமும் முடியவில்லை. எப்போது முற்றும் பெறும் என்பதும் தெரியவில்லை என்ற இக்கட்டான நிலையில்; பூமி பற்றி பேரண்டப் பிரபஞ்சம் பற்றி எல்லாம் ஆய்ந்தறிந்து எதிர்வு கூறிய விஞ்ஞானம் மனிதனைக் கண்டால் எட்ட நில் என்று சொல்வதை விட வேறு வழி எதுவும் தெரியவில்லை என்கிறது.
எப்படி இருக்கிறது இறைவனின் திருவிளையாடல். ஊழிக்காலத்தில் நடக்கின்ற உருத்திர தாண்டவத்தில் எல்லாம் எங்கும் சமத்துவம். இனம், நிறம், சாதி, சமயம், மொழி எதுவும் பெரிதன்று.அந்தோ! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருவாக்கு மட்டுமே இப்பிரபஞ்சத்தில் நிலைத்த நிஜம் என்பது நிரூப்பிக்கப்படுகிறது.இந்த உண்மையை இனியேனும் உணர்ந்தேத்துவோம்.