மஞ்சள் இலையும் இஞ்சி இலையும் பொங்கல் பானையை அலங்கரிக்கட்டும்
Share
மஞ்சளும் இஞ்சியும் தமிழர் வாழ்வில் முதன்மைமிக்க ஔடதங்கள்.
இதில் மஞ்சள் தமிழர்களின் வழிபாட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
மஞ்சள் மாவை குழைத்து அதில் அறுகம் புல் சாத்தி அதனைப் பிள்ளையாராக ஆவா கணம் செய்து வழிபடுகின்ற நடைமுறை நம்மிடம் உண்டு.
இதற்கு மேலாக, திருமாங்கல்யதாரணத்தின்போது தாலியின் தகைமையை மஞ்சள் பெற்றுக் கொள்கிற அளவில் மஞ்சளின் மகிமை உணரப்படும்.
தமிழர் வாழ்வியலோடு மஞ்சள் இரண்டறக் கலந்தது என்பதற்கு அபரக்கிரியை களின்போது மஞ்சள் மாவின் பயன்பாடு தக்க சாட்சியமாகும்.
கிரியை செய்யப்படும் இடத்தை சுத்தம் செய்வது தொடக்கம் அனைத்து அபரக் கிரி யைகளிலும் மஞ்சள் மா பயன்படுத்தப்படுவதனூடு எங்கள் வாழ்வியலோடு மஞ்சள் இரண்டறக் கலந்தது என்பது உறுதி செய்யப்படும்.
இது மஞ்சள் பற்றியது என்றால், இஞ்சி எங்களின் உயிர் காக்கும் மருந்தாகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இஞ்சி மருந்தாகப் பயன் படுகிறது.
இதனாலோ என்னவோ தைத்திருநாளில் நடைபெறும் சூரியப் பொங்கலின்போது, பொங் கல் பானையில் மஞ்சள் இலையும் இஞ்சி இலையும் சேர்த்துக் கட்டுகின்ற பண்பாட்டு மரபு இன்றுவரை நம்மிடம் தொடர்கிறது.
இந்தப் பண்பாட்டின் அடிப்படையில், நெல்லுக்கு இணையாக, முக்கனிகளுக்கு ஈடாக மஞ்சளும் இஞ்சியும் நம்மவர்களால் உற் பத்தி செய்யப்பட்டுள்ளதென்பது உறுதிப்படுத் தப்படுகிறதல்லவா?
என்ன செய்வது, எங்கள் விளைபொருளாக இருந்த மஞ்சளும் இஞ்சியும் இப்போது தைப்பொங்கல் பானையில் கட்டப்படுகின்ற இலைகளாக மட்டுமே நமக்குக் காட்சி தரு கின்றன.
எனினும் இப்போது காலம் நமக்கொரு சந்தர்ப்பத்தை கட்டாயப்படுத்தலாகத் தந்துள்ளது.
அதில் இஞ்சி, மஞ்சள் செய்கையில் நாம் ஈடுபட்டு எங்களுக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
எனவே அனைவரும் சிறு அளவிலேனும் மஞ்சள் மற்றும் இஞ்சிச் செய்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக அரச, தனியார் அமைப்புக்களில் தொழில் புரிவோர் மஞ்சள், இஞ்சிச் செய்கையை வீட்டுத் தோட்டமாகச் செய்தால், உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு வீட்டுத் தேவைக்கான மஞ்சளும் இஞ்சியும் வீட்டு வளவிலேயே கிடைப்பதாகவும் இருக்கும்.
ஆகையால் அடுத்த தைப்பொங்கலில் எங்கள் வீட்டில் வளருகின்ற இஞ்சியில் எடுத்த இலையும் மஞ்சளில் ஆய்ந்த இலையும் சேர்ந்து பொங்கல் பானையை அலங்கரித்து புதுப்பொலிவைத் தரட்டும்.