பாராளுமன்றத்திலேனும் ஒற்றுமைப்படுங்கள்
Share
ஒருமுறை இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார் கள்.
அப்போது அமைச்சராக இருந்த சிறில் மத்யூ, பாணந்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நெவில் பெர்ணான்டோ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை கண்டபாட்டில் திட்டினர்.
காலிமுகத்திடலில் வைத்து அமிர்தலிங்கத்தைக் கட்டித் தொங்கவிட வேண்டும் என் றெல்லாம் வெருட்டினர்.
இவ்வாறு சிங்களப் பேரினவாதிகள் வெறி பிடித்துப் பேசியபோது, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை எதிர்த்து வீரா வேசத்தோடு உரையாற்றினர்.
இங்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது ஒரு கட்சி சார்ந்து கூறப்பட வில்லை.
மாறாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செள.தொண்டமான் போன்ற வர்களும் அமிர்தலிங்கத்துக்கு ஆதரவாக எழுந்து பேசினர்.
இஃது தமிழ் இனத்தின் ஒற்றுமையையும் அவர்கள் தமிழ் இனத்தின் மீது கொண்ட பற்றுறுதியையும் வெளிப்படுத்தி நின்றது.
ஆனால் இன்றைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை அதுவன்று.
இன்றைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 98 வீதத்தினர் தங்கள் பதவிகளைப் காப்பாற்றிக் கொள்வதிலும் அடுத்த முறையும் தாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்ற நோக்கிலுமே இயங்குகின்றனர்.
இவர்களிடம் தமிழினம், தமிழ் மக்கள் என்ற நினைப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்களின் உரிமை என்று இவர்கள் கூறுவதனைத்தும் பாசாங்கேயன்றி வேறில்லை என்பதை உணர முடிகின்றது.
உண்மையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப் பினர்களிடம் தமிழினப் பற்று இருக்குமாயின் அவர்கள் நிச்சயம் பாராளுமன்றத்திலேனும் ஒற்றுமைப்பட வேண்டும்.
ஆம், இலங்கையின் மூத்த குடிகள் தமி ழர்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் நீதி யரசர் விக்னேஸ்வரன் உரையாற்றும்போது, அதனை எதிர்க்கின்ற சிங்களப் பாராளு மன்ற உறுப்பினர்களை எதிர்ப்பதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியது உண்மை என்று சொல்லியிருக்க வேண்டும்.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராம நாதன் ஆகியோரும் விதிவிலக்கல்ல. அவர்கள் ஆளுந்தரப்பில் இருந்தாலும் தமிழர்கள்.
எனவே இந்த நாட்டின் மூத்த குடி தமிழ் என்பதை கூறுவதற்கு அவர்களும் பின்னிற்கக் கூடாது.