நாங்கள் வீடுகளில் இருப்போம் என்பதை யாரால் தடுக்க முடியும்
Share
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கானதாகும்.
எனினும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் அமுல்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆக, சட்ட வரையறைகளுக்குள் உட்படாத ஊரடங்குச் சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதிக்குப் பின்னால் நியாயமான காரணம் உள்ளது என்பதுதான் உண்மை.
அதாவது உலகை உலுப்பி நிற்கின்ற கொரோனா தொற்றைத் தடுப்பதாக இருந்தால், மக்கள் வீடுகளுக்குள் இருப்பதுதான் ஒரேவழி.
எனவே நோய்த் தொற்றிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்கான வழிமுறையை நாம் பின்பற்றுவது மிகவும் அவசியமானது.
இருந்தும் வடபகுதியைப் பொறுத்தவரை கொரோனா நோய் அபாயம் குறித்த விழிப் புணர்வு நம்மிடம் போதாமல் உள்ளதோ என்று எண்ணுமளவுக்கு மக்களின் நடமாட்டம் உள்ளது.
இங்கு ஊரடங்கு என்பது குண்டு வெடிப்புச் சம்பவம் சார்ந்து அல்லது வேறு தாக்குதல் சம்பவங்கள் காரணமாக அமுல்படுத்தப்படவில்லை.
மாறாக, கொடிய கொரோனா நோயிலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
அதேநேரம் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதன் பொருட்டு ஊரடங்கு தளர்த்தப்படுகையில், வீடுகளுக்குள் இருக்கும் அனைவரும் வெளியில் வருவதாக இருந் தால் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டத்தால் எந்தப் பயனும் ஏற்படமாட்டாது.
ஆக, ஊரடங்குத் தளர்வின் போது சுய கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதுதான் இங்கு முக்கியமானது.
எனினும் கொரோனாத் தொற்று எங்களுக்கு ஏற்படாது என்பது போல வட பகுதி மக்கள் நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது.
இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை என்பன முக்கியமாயினும், நோய்த் தொற்று ஏற்படுகின்ற வழிமுறைகளை அறிந்து அதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எல்லா வற்றையும் விட அவசியமானது.
எனவே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் எல்லோரும் வீதிக்கு வருவது என்பதை விடுத்து வீடுகளில் இருப்போம்
என்று நாமே நமக்குச் சட்டம் போட்டு அதனை நடை முறைப்படுத்துவோமாக இருந்தால், தங்களைக் கட்டுப்படுத்தி கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள் என்ற பெருமை உலகில் நமக்குரியதாகும்.
தவிர, வடபகுதியில் கொரோனாத் தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து அபாய எச்சரிக்கை செய்கிறது.
ஆகையால் சுய கட்டுப்பாட்டை நமக்கு நாமே விதித்துக் கொள்வோமாக.