Type to search

Editorial

தமிழ் மக்களே! விழிப்பாக இருங்கள்

Share

நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் போது, மக்களை ஏமாற்றுகின்ற உபாயங்கள் மிக உச்சமாக இடம்பெறலாம்.

இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவில் வாக்களிப்புக்கு முதல் நாள் அல்லது வாக்களிப்புத் தினத்தின் போது தமிழ் மக்கள் நம்பும் வகையில் வேண்டுமென்றே சில விடயங்களை வெளிப்படுத்தி, அதன்மூலம் வாக்குகளைத் தம் பக்கம் திசைதிருப்புகின்ற வியூகங்கள் நடந்தாகும்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இங்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவது முக்கிய மானது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களின் பக்கம் நிற்கிறார் என்றும் அவர் தமிழ் மக்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது.

இதனை அவர்கள் வலிமைப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதான தகவல்களை சிங்கள மக்களிடம் பரப்பினர்.

அதன்விளைவு எதிர்பார்த்த வாக்குகளைக் கூட சிங்கள மக்களிடமிருந்து சஜித் பிரேம தாஸவால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆக, எவ்வளவுதான் தேர்தல் பிரசாரம் செய்தாலும் எவ்வளவுதான் மக்கள் ஆதரவு இருப்பதாக நம்பினாலும் ஒருகணப்பொழுதில் அத்தனையும் தலைகீழாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே மேற்கூறப்பட்டது போன்ற சம்பவங்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் நம் தமிழ் அரசியல் தரப்புகளிடையேயும் இடம்பெறலாம்.

இதற்காகப் பொய்ப் பிரசாரங்கள் கட்ட விழ்த்து விடப்படலாம்.

இது கண்டு தமிழ் மக்களாகிய நாம் மயக்க மடைவோமாயின் எங்களின் எதிர்காலம் இருளாவது தவிர்க்க முடியாது.

உண்மையில் தமிழ் மக்கள் அனைத்தும் அறிந்தவர்கள். அனுபவித்தவர்கள்.
இலங்கைப் பாராளுமன்றில் எங்கள் தமிழ்ப் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள், எப்படி நடந்து கொண்டார்கள், எந்தப் பக்கம் சாய்ந்து நின் றார்கள், அவர்கள் என்ன பெற்றுத் தந்தார் கள் என அனைத்தையும் நாம் நன்கு அறிவோம்.

எனவே எங்களை எவரும் ஏமாற்ற முடியாது. உசுப்பேத்த முடியாது என்பதை எதிர் வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இதற்காக மெய்ப்பொருளைக் காணுகின்ற விழிப்போடு இருப்போமாக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link