தன் பழக்கதோசத்தை வெளிப்படுத்திய பொன்சேகா
Share
பழக்கதோசம் என்பது சந்தர்ப்பத்தில் வந்தே ஆகும் என்பதற்குப் பின்வரும் கதை பொருத்துடையது.
ஒருவர் எதற்கெடுத்தாலும் தான் கட்டியிருக்கும் சாரத்தை மடித்து சண்டியன் கட்டுக் கட் டிக் கொள்வார்.
அந்த நபரை நாடகம் ஒன்றில் நடிக்க வைத்தார்கள். நாடகம் கோவலன் – கண்ணகி. கண்ணகி பாத்திரம் அந்த நபருக்கு வழங்கப்பட்டது.
இப்போது உதவியாளர்கள் கண்ணகி இருக்கும் இடத்துக்கு ஓடி வருகிறார்கள்.
தாயே! கோவலனைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியைச் சொல்கிறார்கள்.
இவ்வாறு செய்தி சொல்லப்படும்போது, என் கணவனைக் கொன்று விட்டார்களா? என்று அதிர்ச்சியோடு கேட்பதுதான் கண்ணகியின் கடமை.
ஆனால் கண்ணகி பாத்திரத்தில் நடித்தவர் கோபவயப்பட்டவராக, தன் பழக்கதோசத்தின் படி கட்டியிருந்த சேலையை மடித்துச் சண்டியன் கட்டாகக் கட்டிக் கொண்டு என் கண வனைக் கொன்றவன் யார்? எனக் கேட்க, அரங்கம் முழுவதும் சிரிப்பும் விசில் அடிப்பு மாக இருந்தது.
நிலைமையைச் சமாளிப்பதற்காக நாடக மேடை, திரை கொண்டு மூடப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் கவலையுற்ற நாடக இயக்குநரை ஆறுதல் படுத்த நினைத்த பெரிய வர் ஒருவர்;
பழக்கதோசம் சந்தர்ப்பத்தில் வந்தேயாகும். நீங்கள் கவலைப்படாதீர்கள். இனியேனும் பாத்திரத்துக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யுங்கள் எனக் கூறிச் சென்றார்.
ஆம், முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரத் பொன்சேகா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கேட்டபோது, சண்டியன் கட்டுக் கட்டும் பழக்கமுடையவன் கண்ணகி பாத்திரம் ஏற்ற கதையே ஞாபகத்துக்கு வந்தது.
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் யதார்த்தமான உரையால் கொதிப்படைந்த சரத் பொன் சேகா, கோபமுற்றவராகத் தான் செய்த பழைய வேலைகளை – போர்க்குற்றங்களைப் போட்டுடைத்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் இந்த உரை இலங்கையில் தமிழ் இளைஞர்களுக்கு நடந்தது என்ன என்பதை எடுத்துக் காட்டுகிறது.
ஆக, இந்த நாட்டின் நீதியரசராக இருந்த ஒருவரையே சுட்டுக் கொல்லுவோம் என மறை முகமாக எச்சரிக்கை செய்கின்ற சண்டாளர்கள் இருக்கும் இந்த நாட்டில் தமிழ் இனத்தின் அவலம் எத்தகையதென்பதைப் புரிதல் கடின மன்று.