உன் உரிமைக்காக நீயே உரக்கக் குரல் கொடு
Share
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
கொரோனாத் தொற்றுக் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அறவே இல்லாத நிலை யில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வும் மறந்து போன விடயமாகிறது.
இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் இன்னும் தீரவில்லை.
2009ஆம் ஆண்டு முற்றுப் பெற்ற யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். எனினும் அதற்கான நீதி கிடைக்கப் பெறவில்லை.
தமிழ் மக்களின் அரசியலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் தனது பலத்தை – இராஜ தந்திர வியூகத்தைப் பிரயோகிக்காமல், சிங்கள ஆட்சியாளர்களின் காலம் கடத்தும் கபடத்தனத்துக்கு இடம் கொடுக்க,
போர்க்குற்றம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்தும் எதுவும் இல்லை என்ற நிர்க்கதி நிலைக்கு தமிழ் மக்களை ஆளாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்துக்கு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தலை யசைக்க; காலம் கடத்தும் சிங்களப் பேரின வாதத்தின் திட்டம் எளிதாக நிறைவேறிற்று.
இவை கடந்த காலத்தில் நடந்தேறிய உலகறிந்த விடயம்.
இவை ஒருபுறமிருக்க, இப்போது கொரோ னாத் தொற்று உலகம் முழுவதற்கும் பிரச் சினையாகிவிட,
ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை மறைபொருளாயிற்று.
உலகம் முழுவதையும் முடங்க வைத்திருக்கும் கொரோனா இன்னும் ஓரிரண்டு வருடங் களில் குணமாகிவிடலாம்.
ஆனால் எங்கள் இனப்பிரச்சினை என்பது தீர்வற்றதாகவே இருக்கப் போகின்றது.
எனவே தமிழ் மக்கள் எப்போதும் தமக்கான உரிமையை உரக்கச் சொல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
உலகத்தை முடக்கி வைத்துள்ள கொரோனா காலம் எங்கள் விடயத்தைச் சொல்வதற்குப் பொருத்தமானதல்ல என்று நினைத்து எங்கள் உரிமை விவகாரத்தை நாங்களே கிடப் பில் போடுவோமாயின் அது தானாகவே மறக்கப்பட்டு விடும்.
எனவே எங்கள் உரிமைக்குரல் எப்போதும் உரக்க ஒலிக்க வேண்டும்.
அதுவொன்றுதான் கொரோனாவைக் கடந்தும் எங்கள் அவலத்தை உலகெங்கும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.